பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 384 நாட்களாக நீடிக்கும் போராட்டம்!

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 384 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 13 கிராம மக்கள் சுதந்திர தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிக்கவும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப் புறங்களில் விளைநிலங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளன. இந்நிலையில் விமான நிலையம் அமைந்தால் தங்களின் இருப்பிடம், வாழ்வாதாரமான விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விமான நிலையம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 384-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதுவரை 6 முறை கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் தீர்மானம் நிறைவேற்றி வந்தனர்.


வீட்டில் கருப்பு கொடி ஏற்றுதல்:
 இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் நாளை சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

பள்ளிகளில் நடக்கும் சுதந்திர தின விழாவுக்கும் மாணவர்களை அனுப்பப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர். வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும் பேரணியாக வந்தும் போராட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கிராம மக்களிடம் சென்று குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் பேரணியை கைவிடுமாறும் தெரிவித்தார்.

ஆனால் போராட்டக் குழுவினர் கோரிக்கையை ஏற்கவில்லை. திட்டமிட்டபடி கருப்புக் கொடி ஏந்தும் போராட்டமும், கிராம சபையை புறக்கணிக்கும் போராட்டமும் நடைபெறும் என்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கோட்ட இயக்கம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.