5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

மத்திய பிரதேசத்தில் நடந்த அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச அரசுப் பணி நியமன விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது “மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்காக தேர்வாகி உள்ள 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேச ஆசிரியர் பணிக்கு சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2014-க்கு முன், ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் பாடம் நடத்தாமல் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வந்தது. தற்போது நமது அரசு மாநில ழிகளில் பாடங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. 2014-க்கு முன் நாடு இருந்த நிலையை நாட்டு மக்கள் யாரும் மறந்துவிட முடியாது. தொடர்ச்சியாக ஊழல்கள் நடந்து கொண்டிருந்தன. தற்போது ஏழைகள் தங்களுக்கான பங்கை, பணத்தை தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாகப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து 13.5 கோடி மக்கள் விடுபட்டிருக்கிறார்கள். வருமான வரி கணக்கு தாக்கலை அடிப்படையாகக் கொண்ட வருமான வரி அறிக்கை, கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருவாய் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறது. 2014-ல் ரூ.4 லட்சமாக இருந்த சராசரி ஆண்டு வருவாய், 2023-ல் ரூ.13 லட்சமாக உயர்ந்திருக்கிறது. குறைந்த வருவாய் பிரிவில் இருந்து உயர் வருவாய் பிரிவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

மக்கள் தாமாக முன் வந்து வரி செலுத்தி வருகிறார்கள். அவ்வாறு வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. அவர்கள் செலுத்தும் வரிப் பணம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என பேசினார்.