கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜம்மு – கஷ்மீர் மக்கள்

ஜம்மு – காஷ்மீர், லடாக் மற்று லே ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியான ஜம்மு – காஷ்மீர், லடாக், லே ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளடு. முதலில், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் நேற்று மதியம் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் லடாக் மற்றும் தோடா மாவட்டத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அடுத்த 10 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.28 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, லேயில் இருந்து 270 கி.மீ, வடகிழக்கே 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது. முன்னதாக இன்று அதிகாலை 2.16 மணிக்கு லடாக்கின் லே பகுதியில் 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, 3.50 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறைந்த ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தான் என்றாலும் மக்கள் பீதியிலேயே உள்ளனர். அடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அதில் இருந்து தங்களை எப்படி காப்பற்றிக்கொள்வது என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.