8 மாத குழந்தையை 800 ரூபாய்க்கு விற்ற பெண்! – ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவில் பழங்குடி பெண் ஒருவர் வறுமை காரணமாக தன்னுடைய 8 மாத குழந்தையை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கராமி முர்மு என்ர பழங்குடி பெண். இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கராமி முர்முவுக்கு சமீபத்தில் இரண்டாவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தையை வறுமை காரணமாக 800 ரூபாய்க்கு குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்பனை செய்திருக்கிறார் கராமி முர்மு. .

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் முசு, இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை பற்றி மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, குழந்தை இறந்துவிட்டதாக கராமி முர்மு பொய் கூறியுள்ளார்.

அதனால் கணவர் முசு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், பெண்குழந்தையை 800 ரூபாய்க்கு, குழந்தையில்லாத ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.