கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்ட நடிகை குஷ்பு!

பிரான்ஸில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரதிநிதியாக நடிகை குஷ்பு கலந்துகொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. வருகிற 27ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில், உலகில் பல்வேறு நாடுகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

பாலிவுட்டில் இருந்து ஐஸ்வர்யாராய், அனுஷ்கா சர்மா, மிருனாள் தாக்கூர், சாரா அலிகான் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் படக்குழுவினர் சென்றுள்ளனர். இந்த விழாவில் நடிகை குஷ்புவும் இந்திய பிரதிநிதியாக பங்கேற்கிறார். இதுகுறித்து குஷ்பு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம், கேன்ஸ் பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் வந்துள்ளேன். மதிப்பு மிகுந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.