AI தொழில்நுட்பம் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் – பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த OPEN AI நிறுவனம் ChatGPT மென்பொருளை அறிமுகம் செய்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் ChatGPT உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான சாம் ஆல்ட்மேன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆல்ட்மேன், “இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்புக் குறித்தும், OPEN AI மூலம் இந்தியா அடையும் பலன் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகச் சிறந்த உரையாடல் நிகழ்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது ட்விட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார். அதில் “ஆழமான உரையாடலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் AI முக்கிய பங்காற்றும். குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் AI பெரும் தாக்கம் செலுத்தும். இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான டிஜிட்டல் மாற்றத்தை முடுக்கிவிடும் அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.