பிரிட்டனில் விமான சேவை திடீர் பாதிப்பு:பயணிகள் அவதி!

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கணினி அமைப்புகளில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரிட்டனில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கணினி அமைப்புகளில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ள தாவும், அந்தக் கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நிலைமை சீரடையும் என்றும் அந்த நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் இருந்து செல்லும் மற்றும் பிரிட்டன் நாட்டுக்கு வரும் விமானங்களின் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு வரும் விமானங்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமானத்தில் செல்வதற்காக வந்த விமானப் பயணிகள் ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். சிலர் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.