உலக தடகள சேம்பியன்ஷிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா:18வது இடத்தில் இந்தியா!

உலக தடகள சேம்பியன்ஷிப் போட்டி நடந்து முடிந்திருக்கும் நிலையில் அமெரிக்கா அதிக பதக்கங்களுடன் முதல் இடத்திலும், இந்தியா ஒரே ஒரு தங்கப்பதக்கத்துடன் 18வது இடத்திலும் உள்ளது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. 9 நாட்கள் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் திருவிழாவில் அமெரிக்கா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களை குவித்து பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்தியா ஒரே ஒரு தங்கத்துடன் 18-வது இடத்தை பெற்று தொடரை நிறைவு செய்தது.

இறுதி நாளான நேற்று முன்தினம் மகளிருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பக்ரைனின் வின்ஃப்ரெட் மட்டில் யாவி பந்தய தூரத்தை உலக சாதனையுடன் 8:54.29 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் பருல் சவுத்ரி (9:15.31) 11வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆடவருக்கான 4×400 தொடர் ஓட்டத்தில் குயின்சி ஹால், வெர்னன் நார்வுட், ஜஸ்டின் ராபின்சன், ராய் பெஞ்ஜமின் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க அணி பந்த தூரத்தை 2:57.31 விநாடிகளில் கடந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றது. பிரான்ஸ் அணி 2:58.45 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கமும், கிரேட் பிரிட்டன் அணி 2:58.71 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் வென்றன. தகுதி சுற்றில் ஆசிய சாதனை படைத்திருந்த முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 2:59.92 விநாடிகளில் கடந்து 5-வது இடம் பிடித்தது.