ஆக.25-ல் ஓடிடியில் ஆனந்த் தேவரகொண்டாவின் பேபி ரிலீஸ்!

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘பேபி’ தெலுங்கு படம் ஆகஸ்ட் 25-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கன்டென்ட் ஆதிக்கம் நிறைந்த சிறிய பட்ஜெட் படங்களுக்கான காலம். தமிழில் ‘டாடா’, ‘குட் நைட்’, ‘அயோத்தி’, ‘போர்தொழில்’ என சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட்டடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றன. தெலுங்கில் வெளியான ‘பேபி’ படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா, விராஜ் அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘பேபி’ ரூ.75 கோடி வரை வசூலித்து மிரட்டியது. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.