கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி – மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி நாளை காலையில் நடைபெற இருப்பதால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நான்காவது சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி நாளை காலை 4 முதல் 11 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி 5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, 42.2 கி.மீ என நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடையும். இதையடுத்து மெரினா சுற்றுவட்டார பகுதிகளில் நாளை அதிகாலை 3 மணி முதல் 11 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

  • ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் பாரிமுனை, எப்.எப்.எஸ். சாலை, முத்துச்சாமி பாலம், வாலாஜா பாயிண்டில் இருந்து வலதுபுறம் திரும்பி அண்ணாசாலையில் வெல்லிங்டன் பாயிண்ட் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • வாகனங்கள் பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் லாயிட்ஸ் சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. இந்த வாகனங்கள் ஐஸ்அவுஸ் சந்திப்பு மற்றும் ரத்னா கபேயில் இருந்து திருப்பி விடப்பட்டு டாக்டர் நடேசன் சாலை செல்ல அனுமதிக்கப்படும்
  • சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை, காரணீஸ்வரர் பக்கோடா தெரு சந்திப்பில் திருப்பப்பட்டு காரணீஸ்வரர் பக்கோடா தெரு வழியாக டாக்டர் நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • மியூசிக் அகாடமியில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு வி.எம்.சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ராமகிருஷ்ண மடம் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • அண்ணாசாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து அண்ணாசிலை செல்ல அனுமதி இல்லை. அவர்கள் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து பின்னி சாலை மற்றும் மார்ஷல் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் என போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.