ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி போட்டியை அட்டகாசமாக தொடங்கியுள்ளது. சென்னை, 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

தொடக்க விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு அணியினருடன் கைகுலுக்கி போட்டியை தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் முகமது தயப் இக்ராம், ஆக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் தென்கொரியா அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் 6-வது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஓகா ரியோமா இந்த கோலை அடித்தார். 26-வது நிமிடத்தில் தென்கொரியா அணியின் சியோலியோன் பார்க் பதில் கோல் திருப்பினார். இதன் மூலம் அந்த அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.

தென்கொரியா வெற்றி தொடர்ந்து தாக்குதல் பாணியை தொடுத்த தென்கொரியா 35-வது நிமிடத்தில் 2-வது கோலை திணித்தது. அந்த அணி வீரர் கிம் சங்ஹூ இந்த கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். பதிலடி கொடுக்க ஜப்பான் தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்தாலும், தென்கொரியாவின் தடுப்பு ஆட்டக்காரர்களை அதனை திறம்பட சமாளித்து கடைசி வரை முன்னிலையை தக்கவைத்து கொண்டனர்.

முடிவில் தென்கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. முன்னதாக ஜப்பான் அணியில் அபாயகரமாக ஆடியதாக புஜிஷிமா ராய்கி (21-வது நிமிடம்), தனகா செரின் (48-வது நிமிடம்), யமடா ஷோடா (55-வது நிமிடம்) ஆகியோர் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு தலா 5 நிமிடம் வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த சமயத்தில் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தென்கொரியா அணியில் ஜூங் மன்ஜா 28-வது நிமிடத்தில் பச்சை அட்டை எச்சரிக்கைக்கு ஆளாகி 2 நிமிடம் வெளியில் அமர வேண்டியதானது. பாகிஸ்தான் தோல்வி இதைத்தொடர்ந்து நடந்த 2-வது ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள மலேசியா, 16-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மலேசிய அணியில் அஷாரி பிர்ஹான் 28-வது, 29-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து மிரட்டினார். 44-வது நிமிடத்தில் சில்வெரிஸ் ஷெலோ கோல் அடித்தார். இதனால் மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக பாகிஸ்தான் 55-வது நிமிடத்தில் கோல் போட்டது. அந்த அணி வீரர் அப்துல் ரகுமான் பந்தை கோல் வலைக்குள் அனுப்பினார். முன்னதாக 53-வது நிமிடத்தில் கிடைத்த அரிய பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் அப்துல் ராணா வீணடித்தார். அவர் அடித்த ஷாட்டை மலேசிய கோல் கீப்பர் ஒத்மன் ஹபிஜூதீன் அருமையாக தடுத்து நிறுத்தினார்.

 மேலும் சில வாய்ப்புகளை பாகிஸ்தான் அணியினர் கோட்டை விட்டனர். முடிவில் மலேசிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பதம் பார்த்தது. இந்திய வீரர்கள் கலக்கல் இரவில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுடன் அடியெடுத்து வைத்த இந்திய அணி தொடக்கம் முதலே எதிரணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் யுக்தியில் மிரள வைத்தது.

5-வது மற்றும் 8-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடுத்தடுத்து கோல் போட்டு அமர்க்களப்படுத்தினார். தொடர்ந்து கோல் மழை பொழிந்த இந்திய அணியில் சுக்ஜீத் சிங் (15-வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (16-வது நிமிடம்), வருண்குமார் (19 மற்றும் 30-வது நிமிடம்), மன்தீப்சிங் (40-வது நிமிடம்) ஆகியோரும் தங்களது பெயரை கோல் பட்டியலில் இணைத்துக் கொண்டனர்.

சீனா தரப்பில் 18-வது நிமிடத்தில் இ வென்ஹய், 25-வது நிமிடத்தில் ஜி செங் காவ் கோல் போட்டனர். கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து கிட்டிய இரு பெனால்டி கார்னரை இந்திய வீரர்கள் விரயமாக்கினர். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால் இந்தியாவின் கோல் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும். முடிவில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை துவம்சம் செய்து இந்த போட்டியை வெற்றியோடு தொடங்கியது.

தமிழக வீரர் இந்திய அணியில் அங்கம் வகிக்கும் தமிழக வீரரான அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்தி மாற்று வீரராக 33-வது நிமிடத்தில் இறங்கினார். அவர் கோல் ஏதும் போடவில்லை. அவரது ஆட்டத்தை அவரது தந்தை செல்வம், தாயார் வளர்மதி மற்றும் குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர் இன்றைய லீக் ஆட்டங்களில் தென்கொரியா- பாகிஸ்தான் (மாலை 4 மணி), சீனா-மலேசியா (மாலை 6.15 மணி), இந்தியா- ஜப்பான் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடங்கியதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஆக்கி போட்டி சென்னைக்கு திரும்பியிருக்கிறது. தமிழ்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து சிறந்த ஆக்கி ஆட்டங்களைக் காண அழைக்கிறேன். ஆசியாவின் மிகப்பெரும் ஆக்கி தொடரின் பெரிய, பெருமைமிகு ஆதரவாளர்களாக சென்னையை திகழச் செய்வோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.