கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்…

20 ஓவர் உலக கோப்பை, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அறிவித்திருக்கிறார்.

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், இதுவரை 103 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், ‘2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிதான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் விடைபெற விரும்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன். இங்கு தொடர்ச்சியாக ரன் குவித்து, அதன் பிறகு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன்.” என கூறியிருக்கிறார். இந்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.