இந்தியாவுக்கு பதிலாக பாரத் : மோடி அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது – ராகுல் காந்தி விமர்சனம்!

இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்பாடு, நரேந்திர மோடி அரசு அச்சத்தில் இருப்பதையேக் காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுல் காந்தி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்தியா எனும் பாரத் என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால், பாரத் என்ற வார்த்தைப் பயன்பாடு, பதட்டத்தின் எதிர்வினையாகவே பார்க்கிறேன். நரேந்திர மோடி அரசு கொஞ்சம் அச்சமடைந்திருக்கிறது.

எனவே, திசை திருப்பும் தந்திரம் நடக்கிறது. நாங்கள் எங்கள் கூட்டணிக்கு இண்டியா என பெயர் வைத்துள்ளோம். உண்மையில் இது ஒரு மிகச் சிறந்த யோசனை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவின் குரலாக இருக்கிறோம். எனவே, இந்தியா என்ற வார்த்தை சிறப்பாக வேலை செய்கிறது. அதேநேரத்தில், இது பிரதமர் மோடியை தொந்தரவு செய்துள்ளது. அதன் காரணமாகவே, பெயர் மாற்றும் முயற்சி நடக்கிறது. இது அபத்தமானது. ஆனால், நாங்கள் எங்கள் கூட்டணிக்கு இண்டியா என பெயர் வைத்ததன் காரணமாகவே, இது நிகழ்கிறது.

அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து நான் எப்போதெல்லாம் கேள்வி எழுப்புகிறேனோ அப்போதெல்லாம், நாடகத்தனமாக எதையாவது செய்யும் நோக்கோடு பிரதமர் மோடி வருகிறார். அதானி விவகாரம் தொடர்பாக நான் நடத்திய செய்தியாளர் சந்திப்பை அடுத்தே, இத்தகைய ஒட்டுமொத்த திசை திருப்பல்களும் நடந்து வருகின்றன. இதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.