பாஜகவுக்கு இந்தியா என்ற சொல் கசக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியா என்ற சொல்லை பாரத் என மாற்றி அழைப்பிதழ் வெளியிட்டிருக்கும் பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

ஜி20 மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்ற சொற்களுக்குப் பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விமர்சித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.