சாம்பியன் பட்டம்வென்றார் கார்ல்சன்: பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் டைபிரேக்கரில் 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா மோதினார். இதில் இரு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தது. இறுதி சுற்றின் முதல் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்த நிலையில் 35-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்திருந்தது. இதன் பின்னர் 2-வது ஆட்டம் 30-வது காய் நகர்த்தலின் போது ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவரும் தலா ஒரு புள்ளியை பெற்றிருந்த நிலையில் வெற்றியாளர் யார்? என்பதை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கர் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

ரேபிடு முறையில் 2 ஆட்டங்கள் கொண்ட டைபிரேக்கர் சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்க நிமிடங்களில் பிரக்ஞானந்தா சிறந்த நிலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் அவர், அளித்த கடுமையான சவால்களை கார்ல்சன் சமாளித்தார். ஆனால் அதன் பின்னர் நெருக்கடியை பிரக்ஞானந்தா பக்கம் திருப்பிய கார்ல்சன் 45-வது காய் நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். இதனால் அவருக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் பிரக்ஞானந்தா களமிறங்கினார். அதேவேளையில் டைபிரேக்கரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஒரு புள்ளியை முழுமையாக பெற்றதால் கார்ல்சன் டிரா செய்யும் நோக்கிலேயே காய்களை விரைவாக நகர்த்தி பிரக்ஞானந்தாவுக்கு அழுத்தம் கொடுத்தார். நேர அழுத்தத்திற்கு உள்ளான பிரக்ஞானந்தா ஒரு கட்டத்தில் பின்னடைவை சந்திக்கத் தொடங்கினார்.

முடிவில் 22-வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இறுதியில் 32 வயதான மேக்னஸ் கார்ல்சன் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கார்ல்சன் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள போதிலும் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். பட்டம் வென்ற அவருக்கு ரூ.91 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

வெள்ளிப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவுக்கு உலகக் கோப்பை செஸ் தொடர் வியக்க வைக்கும் வகையிலான பயணமாக அமைந்தது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை கால் இறுதி சுற்றிலும், 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவை அரை இறுதி சுற்றிலும் வீழ்த்தி இறுதியாக கார்ல்சனை எதிர்கொண்டிருந்தார்.

இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு ஃபிடே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்ற 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதன் மூலம் இந்திய சதுரங்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தையும் தொடங்கி இருந்தார்.

உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 2024-ம் ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் ஜாம்பவான்களான அமெரிக்காவின் பாபி பிஷ்ஷர், மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கு பிறகு இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்ற 3-வது வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.