‘சந்திரமுகி 2’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு – செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாகவும், படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா முறையில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஷாருக்கானின் ‘ஜவான்’ நல்ல வரவேற்பை பெற்று வருவதாலும், ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்கள் போட்டிக்கு வர இருப்பதாலும் வசூல் பாதிக்கலாம் என்பதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது படக்குழு தரப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றபட்டுள்ளதாகவும், படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதியில் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ஜெயம்ரவியின் ‘இறைவன்’, ஹரீஷ் கல்யானின் ‘பார்கிங்’, சித்தார்த்தின் ‘சித்தா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.