நிலவின் மீதுள்ள மணல்பரப்பின் வெப்பநிலை? – சந்திரயான் – 3 பகிர்ந்த முதல் ஆய்வு தகவல்!

நிலவின் மீதுள்ள மணல்பரப்பின் வெப்பநிலை குறித்த தகவலை அனுப்பியிருக்கிறது விக்ரம் லேண்டர் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை குறித்து விக்ரம் லேண்டர் மூலம் ரோவர் நடத்திய ஆய்வுக்குறிப்பு கிடைத்திருப்பதாக இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. அதில், “விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra’s Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நிலவின் மேல் பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை சேஸ்ட் செய்கிறது. இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது.

அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.