நீர்நிலைகளை மாசுப்படுத்தும் ரசாயனங்களை பயன்படுத்தக்கூடாது : திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ்

திருப்பூர்

நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ண பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்களைக் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.

விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கொண்டாட ஒத்துழைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.