ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது ஐபிஎல் போட்டி. இன்னும் 4 ஆட்டங்களே உள்ள நிலையில், ஏற்கனவே குஜராட் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியபோது, “பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றதற்கு தனி சூத்திரம் எதுவும் இல்லை. அணியில் வீரர்களுக்கு அவர்களது பலத்திற்கு ஏற்றவாறு ரோல்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களது பலவீனம் தெரிந்து அதில் வளர்ச்சி அடைய பயிற்சிகளும் உரிய கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி வரும் உதவியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் இதற்கு காரணமாக பார்க்கிறேன். பத்திரனா அவரது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். தேஷ்பாண்டே தன்னை நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்று அணிக்காக செயல்படும் வீரர்களே தேவை.” என கூறினார்.