உலக கோப்பை செஸ் போட்டியில் இறுதி வரை முன்னேறி சாதனை படைத்த இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அஜர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட் டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை பாராட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிரக்ஞானந்தாவுக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கப் போவதாக, ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 1 கோடிக்கும் அதிகமான எக்ஸ் சமூக வலைதள பயனர்கள், மஹிந்திராவின் தார் ரக காரை பரிசாக அளிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், நான் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு, மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசாக அளிக்க போகிறேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன். இது எலக்ட்ரிக் கார்களைப் போலவே நமது கிரகத்துக்கும் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு. எனவே, பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி.,யை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.