சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி மஞ்சன தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

இன்று சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி மஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் கீழ வீதியில் இருந்து புறப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சாலைகளின் இரு புறமும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.