பகை வெல்லும் பட்டாளமாய் ; அறம் காக்கும் அணி வகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பகை வெல்லும் பட்டாளமாய் ; அறம் காக்கும் அணி வகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர் என கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரை நாம் நினைக்காத நாள் இல்லை, எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடி மனதிலிருந்து உச்சரிக்கும் போதும் உடன் பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது. உத்வேகம் கிடைக்கிறது. தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர். எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான். அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.

திராவிட மாடல் அர சாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழி காட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது கலைஞர் கோட்டம்.

வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொது வாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை – என் தாத்தா முத்து வேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன. ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன். பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்து வேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணி வகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்.” என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.