தமிழ்நாடு காவல்துறையில் காவலர் வேலை:TNUSRB தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் ஆகிய வேலைகளுக்கு 3359 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களில், மாவட்ட, மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு பெண்களுக்கு 780 இடங்களும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 1819 இடங்களும், சிறை மற்றும் சீர்திருத்த துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு ஆண்களுக்கு 83 இடங்களும், பெண்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் வேலைக்கு 674 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை ஊதியம் அளிக்கப்படும்.

1.7.2023ம் தேதியின்படி 18 வயது முதல் 26 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதேபோல் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 37 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் மத்திய ஆயுதப்படை காவல்படையினர் ஆகியோருக்கு 47 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 10 சதவிகித இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் விளையாட்டு போட்டிகள்ல் பெற்ற மதிப்பெண்களுக்கு தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிகபட்சமாக 6 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.