திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 10 பேர் சிறிய காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தபோதும், அடுத்தடுத்து பழிவாங்கும் வகையில் கொலைகள் நடைபெற்ற வண்ணம் இருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறிய மோதல் தொடர்பாக ஏற்படும் முன்விரோதம் கடைசியில் கொலையில் முடிகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பேட்டை மயிலப்பபுரம் பிச்சையா, சுத்தமல்லியில் கொம்பையா, மேலவீரராகவபுரம் மகேஸ், மேலநத்தம் மாயாண்டி, வீரவநல்லூர் அருணாச்சலகுமார் உட்பட 10 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
தடுக்க நடவடிக்கை இல்லை: கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு கீழுள்ளவர்கள். தற்போது இவர்களது குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜாதி ரீதியிலான கொலை நடந்தால் பதற்றமடையும் காவல்துறை, கொலை செய்யப்பட்டவர் தரப்பும், கொலை செய்தவர்கள் தரப்பும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்ததும் மிதமாகவே விசாரணையை தொடர்வதாக தெரிகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் சாதி வன்முறை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலைகளால் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது தனிநபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது. இச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞருர் பிரம்மா கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களால் மாவட்ட மக்களிடையே ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சரிவர பணியாற்றவில்லை என்பதையே இது வெளிக்காட்டியுள்ளது. உளவுப்பிரிவு காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறியிருக்கிறார்கள்.
உளவுத்துறையின் நுண்பிரிவில் இடம் பெற்றுள்ள காவல்துறையினர் பல ஆண்டுகளாக வெறுமனே கடமைக்கு பணியாற்றுகிறார்கள். பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை.
கொலை வழக்கில் தேடப்படுவோர் நீதிமன்றங்களில் சரணடையும் நிலையும் உள்ளது. தகவல் அளிக்காமல் உறங்கிப்போன உளவுத்துறை அதிகாரிகள், ஒருவேளை முன்கூட்டியே தகவல் தெரிவித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறமையான காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும். மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று கொலை சம்பவங்கள் நடந்தால் மக்களிடையே அச்ச உணர்வு தலைதூக்கும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு அவப் பெயர் ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.