கேரள பெண்கள் ஐஎஸ் பயங்கராவத அமைப்பில் சேருவது போல எடுக்கப்பட்டுள்ள திரைப்படமான தி கேரளா ஸ்டோரீஸ் திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தை அனுக உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை கதைக்களமாக கொண்டு வெளியான பல்வேறு மலையாள திரைப்படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. கேரள பெண்களைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் இஸ்லாம் பெண். மற்றவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்தப் படம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது என கூறி தடை செய்திருக்கிறார். அதேபோல கேரளாவின் எதிர்கட்சி தலைவர் சதீசனும் அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மதசார்ப்பின்மையை பின்பற்றும் அனைத்து தலைவர்களும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் ஏற்கனவே அந்த திரைப்படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு மீதான விசாரணையை மேற்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தற்போது மீண்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்த நிலையில், “இந்த விஷயத்திற்கு உச்சநீதிமன்றத்தை நாட தேவையில்லை. கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் போதும்” என அந்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.
திரைப்படம் மே 5ம் தேதி வெளியாக இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் அந்த திரைப்படத்தை வெளியிட்டால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது உளவுத்துறை.