சென்னை – பெங்களூரு அணிகள் மோதல்!

சென்னை – பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டங்களில் 2 வெற்றி (லக்னோ, மும்பைக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், ராஜஸ்தானுக்கு எதிராக) என புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இதேபோல் பெங்களூரு அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக) 2 தோல்விகளுடன் (கொல்கத்தா, லக்னோவுக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. குறைவான பவுண்டரி தூரம் கொண்ட இங்கு ரசிகர்கள் ரன் மழையை தாராளமாக எதிர்பார்க்கலாம். இங்கு இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன.