பல லட்சம் மாணவர்கள் பசியாறும் காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக விமர்சித்த தினமலர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக விமர்சித்த தினமலர் நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் இன்று தினமலர் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமலருக்கு எனது வன்மையான கண்டனங்கள்!: என கண்டனம் தெரிவித்துள்ளார்.