1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழகம் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!
தமிழகத்துக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாஜகவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.