அணு ஆயுதத்தை நம்பியிருக்க வேண்டாம்: நாகசாகி நினைவு தினத்தில் நகர மேயர் வலியுறுத்தல்!

கடந்த 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இந்தத் தாக்குதலின் நினைவு தினமான இன்று அணு ஆயுதத்தை நம்பி உலக நாடுகள் இருக்க வேண்டாம் என நாகசாகி நகர மேயர் ஷீரோ சுசுகி வலியுறுத்தியுள்ளார்.

ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசிய மூன்று நாட்களுக்கு பின்னர் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அப்போது அணுகுண்டை வீசியது. ஃபேட் மேன் (Fat Man) எனும் அணுகுண்டை அன்றைய தினம் காலை 11.02 மணி அளவில் அமெரிக்கா வீசியது. அது ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 74,000 பேர் உயிரிழந்தனர். அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் வாழ்நாள் முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொண்டனர்.

நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு, அதில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மேயர் ஷீரோ சுசுகி பங்கேற்றார். அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய 85 வயதான டேகோ குடோ இதில் பங்கேற்றார். நாகசாகி டெஜிமா மெஸ்ஸே மாநாட்டு மையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

“அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள், மோதலை எதிர்கொள்ளும்போது அழிவை விளைவிக்கும் ஆயுதங்களை சார்ந்து இருக்கக் கூடாது. அதிலிருந்து விடுபட்டு உங்கள் தீரத்தை வெளிக்காட்ட வேண்டும்” என சுசுகி தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அணு ஆயுத பயன்பாடு சார்ந்த அச்சுறுத்தல் இருப்பதாகவும் பேசினார். அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் அரசு விரைவில் கையெழுத்திட வேண்டும்மெனவும் அவர் வலியுறுத்தினார்.