பிரிட்டனில் சாலை விதிகளை மீறும் நபர்கள் கண்காணிக்க பொருத்தப்பட்ட AI கேமரா மூலம் 297 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை.
பிரிட்டனில் சோதனை முறையில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறும் நபர்களை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட AI கேமரா மூலமாக 3 நாட்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி போலீஸார் கடந்த ஆண்டு இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர். அதில் வாகனம் ஓட்டியபடி போனில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை ஏஐ கேமரா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காட்சியை மனிதவளத்தை கொண்டு உறுதி செய்த பின்னர் அபராதம் விதிக்கலாம் என போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் ஏஐ கேமராவை நிரந்தரமாக பொருத்தியுள்ளனர். கேமரா பொருத்தப்பட்ட முதல் 72 மணி நேரத்தில் மட்டுமே 117 பேர் வாகனம் ஓட்டிய போது மொபைல் போன் பயன்படுத்தியது மற்றும் 180 பேர் சீட் பெல்ட் அணியாத காரணத்தாலும் கேமரா பார்வையில் சிக்கியுள்ளனர். அதை போலீஸார் உறுதி செய்து அபராதம் விதித்துள்ளனர். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை மேற்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.