அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது இளைஞரான விவேக் ராமசாமி ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்பெற்றவர். தற்போது தொழில்முனைவோராக உள்ளார். 2024-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட அவர் விண்ணப்பித்துள்ளார்.
அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் விவேக் ராமசாமி, கவனம் ஈர்த்து வருகிறார். அவரை சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டினார். “விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றி சொல்ல நல்ல விஷயங்களே உள்ளன. சமீபத்திய அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ‘அதிபர் டிரம்ப்’ குறித்தும் டிரம்ப் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விஷயங்களை மட்டும் சொல்லக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், தற்போது விவேக் ராமசாமியுடனான நேர்காணல் ஒன்றை, அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பதிவிட்ட டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.