ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது – போராட்டத்தில் ஈடுபடும் தொண்டர்கள்…

இன்று காலை ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரபிரதேச முதல்வராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி அதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது.

அவர் ஆட்சியில் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதன் மூலம் அரசுக்கு ரூ.350 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர்.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் நான் கைது செய்யப்படலாம்’ என பேசியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் நந்தியாலாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவு பேருந்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்த அவரை அதிகாலையில், டிஐஜி ரகுராமி ரெட்டி தலைமையிலான காவல்துறையினர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்வதாக அவரிடம் கைது செய்வதற்கான நோட்டீஸை அளித்தனர்.

ஆனால், அவர் என்னை எதற்காக கைது செய்கிறீர்கள்? அதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்’ என கேட்டிருக்கிறார். அதற்கு காவல்துறையினர், அத்தனை ஆதாரங்களையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டோம். உங்களுடைய கைது வாரண்ட்டில் அனைத்து தகவல்களும் உள்ளன என தெரிவித்திருக்கிறார். எஸ்பிஜி பாதுகாப்பில் இருக்கும் அவரை வெளிச்சம் இல்லாத நேரத்தில் கைது செய்ய எஸ்பிஜி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவும். 6 மணி வரை காத்திருந்து கைது செய்து விஜயவாடாவிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் காஞ்சிபுரம் மண்டலம் சென்னை மண்டலம் பேருந்துகள் திருத்தணி வரை மட்டுமே செல்லும் எனவும் ஆந்திர எல்லைப் பகுதிகளுக்கு செல்லாது என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது.

காலை முதலே போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நண்பர்கல் ஒரு மணிக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. தமிழகம் திருப்பதி இடையிலான பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.