சொத்து குவிப்பு வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகள், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்தை விட 54% கூடுதலாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021-ல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.23 லட்சத்து 85 ஆயிரம், ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி பொருள், 136 கனரா வாகனப் பதிவு ஆவணங்கள்,19 ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்பின்னர் கடந்த மே மாதம் 216 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் முதல் விசாரணை கடந்த 5-ம் தேதி தொடங்கிய நிலையில் அன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரது மனைவி ரம்யா அன்று ஆஜராகவில்லை.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த், இந்த வழக்கை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.