ரிஷப் ஷெட்டி முதல் மாதவன் வரை:சந்திரயான்-3 மிஷன் வெற்றிக்கு திரையுலகினர் வாழ்த்து! 

இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. தொடர்ந்து அதிலிருந்து பிரிந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இது விண்வெளி சார்ந்த ஆய்வில் தனித்துவ சாதனையாகவும் அமைய உள்ளது. நாடு முழுவதும் இந்நிகழ்வை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரயான் -3 மிஷன் வெற்றிபெற திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முக்கியமான மைல்கல் இது. இந்த வரலாற்றைக் காண ஆவலுடன் இருக்கிறேன். விக்ரம் லேண்டர் பாதுகாப்பாக தரையிறங்க பிரார்த்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் மாதவன்: “என்னுடைய வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள். சந்திரயான்- 3 திட்டம் நிச்சயம் வெற்றிபெறும். இஸ்ரோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். நம்பி நாராயணனுக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி: “பெருமை மிகு தருணம்” என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பார்வதி: “சந்திரயான் 3 நிலவில் தரையிரங்க உள்ள நிலையில் நம் நாட்டின் விண்வெளி ஆய்வில் இன்று முக்கியமான நாள். நம் நாட்டின் அறிவார்ந்த விஞ்ஞானிகளின் அர்பணிப்பு, அயராத உழைப்பு, புத்திகூர்மைக்கு இது சான்று. இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும் இந்த கண்டுபிடிப்பை கொண்டாடுவோம். வெற்றிகரமாக தரையிரங்க வாழ்த்துகிறேன். நமது அறிவியல் பாரம்பரியத்தின் மற்றொரு பெருமைமிகு அத்தியாயம்” என பதிவிட்டுள்ளார்.