ஜி20 மாநாடு : டெல்லியில் இன்று இரவு முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!

தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட இருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஓராண்டாக டெல்லியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபம் என்ற பெயரில் புதிய மண்டபம் கட்டப்பட்டது. மண்டபத்தின் முகப்பில் தமிழ்நாட்டின் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

புதுடெல்லி மாவட்டத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த ரெயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மாநாட்டையொட்டி நாளை, நாளை மறுநாள் மற்றும் 10-ந்தேதி ஆகிய 3 நாட்களும் கடுமையான கட்டுப்பாடுகள் கையாளப்படுகிறது. இந்த 3 நாட்களும் மாநகரம் முழுவதும் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு, பட்டேல் சவுக், ஆர்.கே.ஆஸ்ரம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டு உள்ளது.

மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பல இடங்களையும் சுற்றிப் பார்ப்பார்கள் என்பதால் இந்த 3 நாட்களும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி மாவட்டத்துக்குள் எந்த வணிக நிறுவனங்களும் செயல்படாது. உணவு வினியோகம் உள்ளிட்ட ஆன்லைன் வியாபாரம் எதுவும் நடைபெறாது.

டெல்லி மக்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பிக்னிக் என மன ஆறுதலுக்காக வந்து செல்லும் இடமும், சுற்றுலா பயணிகளின் வருகைத்தளமுமான கடமைப்பாதைக்கு இந்த 3 நாட்களில் யாருக்கும் அனுமதி இல்லை. யாரும் வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த 3 நாட்களும் விமான பயணம் மற்றும் ரெயில் பயணத்துக்காக திட்டமிட்டு இருப்பவர்கள் போக்குவரத்து ஆலோசனைகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் 10-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.