தொடங்கியது ஜி20 உச்சிமாநாடு – ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ கவனம் ஈர்த்த கருப்பொருள்!

‘வசுதைவ குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடக்கும் ஜி20 மாநாடு.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டுப் பகுதிக்கு வந்தடைந்தனர். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார். காலம், முன்னேற்றம், தொடர்ச்சி ஆகியவைகளைக் குறிக்கும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோனார்க் சின்னத்தின் பிரதி முன்பாக நின்று பிரதமர் உலகத் தலைவர்களை வரவேற்றார்.

இந்தியாவின் ஜி20 தலைமைக்கான கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ . இந்த கருப்பொருள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய செயல்திட்டம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைத்து தலைவர்களையும் வரவேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, “இந்தியாவின் வசுதைவ குடும்பகம் எனப்படும் இம்மாநாட்டிற்கான கருப்பொருள், உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள், இந்த தொலைநோக்கை நனவாக்கும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்தார்.

மாநாட்டின் முதல் அமர்வு காலை 10.30 மணிக்கு மாநாட்டின் இந்த ஆண்டு தலைப்பான “ஒரு பூமி” என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து மதிய உணவு நடைபெறும் அதன் பின்னர் இரண்டாவது அமர்வு “ஒரு குடும்பம்” என்ற தலைப்பில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 4.45 முதல் 5.30 மணி வரை 45 நிமிடங்கள் பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டுத் தலைவர்களுடனான தனிப்பட்ட சந்திப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்பாடு செய்திருக்கும ஜி20 விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.