2022 – 2023 நிதி ஆண்டில் ஜிடிபி 7.2% வளர்ச்சி பெறும் என்ற கணிப்பு நம்பிக்கை அளிக்கிறது : மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன்

2022-23 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பு நம்பிக்கை அளிக்கிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் 2022-23க்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. மேலும், தனியார் நுகர்வு மற்றும் தனியார் முதலீடு காரணமாக 2023-24ல் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் என பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதுகுறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற பாரத் வர்த்தக சபையின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன், “2022-23-ல் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யின் முதல் நம்பகமான மதிப்பீடு. இத்தகைய வளர்ச்சி அரசாங்கத்துக்கும் பொருளாதாரத்துக்கும் மகிழ்ச்சியளிக்கும் சாதனை. எனது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை என்னவென்றால், 2022-23-ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் இறுதி செய்யும்போது, அது 7.2 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.

2021-22-ன் ஜிடிபி 9.1% ஆக மதிப்பிடப்பட்டது. 2022-23-ன் ஜிடிபி 7.2% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு அரசாங்கத்தைவிட, தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் முயற்சி அதிகம். நாட்டின் பொருளாதாரம், சில வெளிப்புற ஆபத்து காரணிகளை சமாளிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது. ஏனெனில், குறைந்த விலையில் எண்ணெய் வாங்குகிறோம்; அதோடு, ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதாரமும் வலுவானதாக இருக்கிறது. இதனால் இந்தியா பயனடைந்து வருகிறது” என தெரிவித்தார்.