ஜெர்மனில் களைகட்ட போகும் 8-வது உலக இலக்கிய திருவிழா : தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் சுகிர்தராணி பங்கேற்பு!

ஜெர்மனில் களைகட்ட போகும் 8-வது உலக இலக்கிய திருவிழா : தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் சுகிர்தராணி பங்கேற்பு!

ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழத்தில் 8-வது உலக இலக்கிய திருவிழா ஏப்ரல் 17 தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் சுகிர்தராணி உட்பட, பிற நாடுகளை சேர்ந்த 11 கவிஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கவிஞர் சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டம், இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973ல் பிறந்தவர். 1 முதல் 10 -ஆம் வகுப்புவரை இலாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தவர், மேற்கொண்டு 11 -12 வகுப்புகளை இராணிப்பேட்டையில் படித்தார். பின்னர் இராணிப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றாவர், பிறகு எம்.ஏ. தமிழ் இலக்கியம், எம்.ஏ. பொருளாதாரம், பி.எட். உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிஞர் சுகிர்தராணி 1990களின் பிற்பகுதியில் இருந்து கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

சுகிர்தராணி, சாதிக்கு எதிராகவும்,ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும், செயல்பட்டும் வருபவர். பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர். தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். பெண்களுக்கான இயங்குவெளி என்பது சமூகத்தாலும் ஆண்களாலும் வரையறுத்து வைக்கப்பட்டிருப்பதையும், பெண்களின் உடல் என்பது ஆண்களின் அடக்குமுறைக்கும், பாலியல் அதிகாரத்திற்கும் களமாக இருப்பதையும் தன் படைப்புகள்மூலம் கேள்விக்குட்படுத்தி வருபவர்.

இப்படி சிறப்புமிக்க எழுத்தாளரான, ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழத்தில் 7 நாட்கள் நடைபெற உள்ள 8-வது உலக இலக்கிய திருவிழாவில், தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டு பேச உள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழத்தில் ஏப்ரல் 17 தொடங்கி 23-ஆம் தேதி வரை உலக இலக்கிய திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து நான் உட்பட பிற நாட்டு கவிஞர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் தமிழ்நாட்டில் இருந்து என்னை தேர்வு செய்திருப்பது மட்டுமின்றி அவர்களோடு நானும் இருக்கிறேன் என்பது மிக பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த உயரத்தை அடைய என் எழுத்துக்களும் ஒரு காரணம். இதுமட்டுமின்றி எனது இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என் வாசகர்கள், தோழிகள், உடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் ,பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நண்பர்கள் என அனைவரும் தான். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி அதற்கான அனுமதி சான்றை உடனடியாக அளித்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.