குட் நைட் மணிகண்டனின் புதிய படம்: கிளாப் அடித்து தொடங்கி வைத்த விஜய் சேதுபதி!

குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த படம் ‘குட் நைட்’ இதில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை மீண்டும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பிரபுராம் வியாஸ் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ‘மாடர்ன் லவ்’ தொடரில் ராஜுமுருகன் இயக்கிய ‘லாலாகுண்டா பொம்மைகள்’ எபிசோடின் மூலம் பிரபலமான ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை நடிகர் விஜய் சேதுபதி கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.