உயர்நீதிமன்ற நீதிபதிகள் 23 பேர் பணியிட மாற்றம் – உச்சநீதிமன்ற கொலீஜுயம் பரிந்துரை

ராகுல்காந்தி வழக்கில் தண்டனை வழங்கிய குஜராத் நீதிபதி உள்ளிட்ட 23 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்தது உச்சநீதிமன்ற கொலீஜியம்.

உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் நீதிபதிகள் 23 பேரை பணியிட மாற்றம் செய்து பரிந்துரை செய்திருக்கிறது உச்சநீதிமன்ற கொலீஜியம். அதன்படி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக், பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவதூறு வழக்கில் 2 வருட சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தவர் தான் நீதிபதி ஹேமந்த் எம்.பிரச்சாக். இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், குஜராத் ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதிகள் அல்பேஷ் கே.கோக்ஜே, குமாரி கீதா கோபி, சமீர் ஜே. தாவே ஆகியோரும் முறையே அலகாபாத், சென்னை, ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் அர்விந்த் சிங் சங்வான், அவ்னீஷ் ஜிங்கான், ராஜ்மோகன் சிங், அருண் மோங்கா ஆகியோர் முறையே அலகாபாத், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அலகாபாத்தில் பணியாற்றி வரும் நீதிபதி விவேக் குமார் சிங், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னூரி லஷ்மண், எம்.சதீர் குமார், ஜி. அனுபமா சக்கரவர்த்தி ஆகியோர் முறையே ராஜஸ்தான், சென்னை, பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலீஜியம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.