தன்னை எதிர்ப்பவர்களைக் கூட தான் ஆசிரியர்களாகவே கருதுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை ஒட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஆசிரியர் தினமான இன்று, அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மரியாதையான வணக்கங்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவான அஞ்சலி. குருவின் இடம் வாழ்க்கையில் மிக உயர்ந்தது. அவர் உங்கள் வாழ்க்கையின் பாதையை ஒளிரச் செய்கிறார். சரியான திசையில் செல்ல உங்களை அவர் ஊக்குவிக்கிறார்.
மகாத்மா காந்தி, கௌதம புத்தர், ஸ்ரீ நாராயண குரு போன்ற பெரிய மனிதர்களை நான் எனது குருக்களாகக் கருதுகிறேன். சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற அறிவையும், அனைவரிடமும் கருணையுடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு வழங்கியவர்கள் அவர்கள்.
இந்திய மக்களும் ஆசிரியர்களைப் போன்றவர்களே. வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்வதில் அவர்கள் உதாரணமாகத் திகழ்கிறார்கள். பிரச்சினைகளை துணிவுடன் எதிர்த்துப் போராட நம்மைத் தூண்டுகிறார்கள். எனது எதிரிகளையும்கூட நான் எனது ஆசிரியர்களாகவே கருதுகிறேன். அவர்களின் நடத்தையையும், பேசும் பொய்களையும் அறிவதன் மூலம் நான் செல்லும் பாதை முற்றிலும் சரியானது என்று எனக்கு அவர்கள் கற்பிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆசிரியர்கள்தான் உண்மையில் தேசத்தை உருவாக்குபவர்கள். அவர்கள் நமக்கு வழிகாட்டும் விளக்குகள் மட்டுமல்ல, நல்ல விழுமியங்களை நமக்குத் தெரிவிப்பவர்கள், தார்மீக ரீதியாக நமது மனசாட்சியைக் காப்பவர்கள். ஆசிரியர் தினத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வணக்கம். அவர்கள்தான் நமது எதிர்கால விதியை நிர்ணயிப்பவர்கள். தத்துவஞானியாகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் நமது நாட்டிற்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவருடைய பங்களிப்பும், அர்ப்பணிப்பும், ஞானமும், தலைமுறை தலைமுறையாக நம்மைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.