நான் வெற்றிபெறவில்லை:ஆனால் இதன் மூலம் சிறுவர்கள் செஸ் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள்:பிரக்ஞானந்தா பேட்டி!

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த 18 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா, உலக கோப்பை அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா, நார்வே நாட்டைச் சேர்ந்த ஏற்கனவே 5 போட்டிகளில் சேம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடினார்.

முதல் விளையாட்டில் இருவரும் ஒரே புள்ளிகளில் விளையாட்டை ட்ராவ் செய்தனர். அதன்பின்னர் நேற்று நடந்த டைபிரேக்கரில் முதல் சுற்றில் இருவரும் ட்ரா செய்த நிலையில், இரண்டாம் சுற்றின் முடிவில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் இரண்டாம் இடம்பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து உலக மக்களை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த இளம் செஸ் விளையாட்டு விரரான பிரக்ஞானந்தா, பேசியபோது, “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது சிறப்பானது. நான் ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை. ஆனால், செஸ் விளையாட்டில் இது வழக்கமான ஒன்று. அதிகளவில் சிறுவர்கள் செஸ் விளையாட்டின் மீது கவனம் செலுத்துவது நன்மைக்கே. அதன் மூலம் பலர் இதில் பங்கேற்று விளையாடுவார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி. இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்கத் தொடங்குவார்கள் என நினைக்கிறேன்.

நான் இறுதிப்போட்டி வரை முன்னேறி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இதில் விளையாடினேன். கார்ல்சன் உடன் செஸ் குறித்து நிறைய உரையாடினேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்தடுத்து நிறைய தொடர்களில் விளையாடி வருவதால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த தொடருக்கு தயாராக உள்ளேன்” என கூறினார்.