ஒரு காலத்தில் தூக்கம் தேவையற்றது என நினைத்தேன்: சக ஊழியர்களிடம் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட பில் கேட்ஸ்!

ஒரு காலத்தில் தூக்கம் என்பதே தேவையற்றது. சோம்பல் நிறைந்தது என நினைத்திருந்தேன் என உலக பணக்காரரான பில் கேட்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார் பில் கேட்ஸ். தன்னுடைய 67 வயதில் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். அதுவும் தன்னுடைய இளவயதில் தூக்கமே இல்லாமல் உழைத்ததின் பலன், 1995ல் இருந்து 2017 வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை நிரப்பினார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டாலர்கள்.

வியக்க வைக்கும் நபரான பில்கேட்ஸ் ஒரு நேர்காணலில், “என்னுடைய 30 மற்றும் 40 வயதுகளில் தூக்கம் குறித்து நாங்கள் இப்படி பேசிக்கொள்வோம். ஒருவர் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் தூங்குவதாகச் சொல்வார். அவரை இடைமறித்து பேசும் மற்றொருவர் தான் 5 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக சொல்வார். அதை கேட்டு நான் வியந்தது உண்டு. அப்போது தூக்கம் என்பது சோம்பல் மற்றும் தேவையற்றது என நினைத்திருக்கிறேன். அதனால், குறைந்த அளவு தூங்கவும் முயற்சி செய்திருக்கிறேன்” என சக ஊழியர்களுக்கு இடையில் தான் நிகழ்த்திய உரையாடலை பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

ஆனால், பின்னாளில் தூக்கம் குறித்த தனது எண்ணத்தை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். “இப்போது என்னவென்றால் ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியத்துக்கு அவசியம் என நாம் அறிகிறோம். அது இளம் வயதினருக்கும் அவசியம் தேவை” என தெரிவித்திருக்கிறார்.