எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்பினேன்: INDIA கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணம் இல்லை:பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்பினேன், INDIA கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணமில்லை என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் மாதம் 23ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்நிலையில் அதனுடைய அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை மாதம் நடைபெற்றபோது, இண்டியா என கூட்டணிக்கு பெயர் முடிவு செய்யப்பட்டது. இந்த விஷயம் அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு மும்பையில் ஆக.31-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சந்திப்பு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம், ‘இண்டியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதிஷ், “நான் எதுவாகவும் ஆக விரும்பவில்லை. நான் இதைத் திரும்பத் திரும்ப உங்களிடம் கூறி வருகிறேன். எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. நான் அனைவரையும் ஒன்றிணைக்கவே விரும்பினேன்” என்று தெரிவித்தார்.