நாசிக்கில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளில் வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான லாசல்கான் சந்தை உட்பட நாசிக் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளிலும் வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மராட்டிய பொதுப்பணித்துறை மந்திரி தடா பூஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தைப் பயன்படுத்தும்போது, சில்லறை விலையை விட 10 அல்லது 20 ரூபாய் அதிக விலையில் பொருட்களை அவர்களால் வாங்கமுடியும். வெங்காயம் வாங்க முடியாதவர்கள், இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது.
சில சமயங்களில் வெங்காயம் குவிண்டாலுக்கு 200 ரூபாயாக இருக்கும். சில சமயங்களில் 2,000 ரூபாயாகவும் அதிகரிக்கும். இதுபோன்ற நிலைமையில் ஆலோசனை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். வெங்காய ஏற்றுமதி வரி விதிக்கும் முடிவு சரியான ஒருங்கிணைப்புடன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.