நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது! – இஸ்ரோ தலைவர் பேட்டி

நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

உலக நாடுகளே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என்கிற பெருமையை பெற்றிருக்கிறது. கடந்த 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர். அதில் இருந்து வெளியேறிய ரோவர், தற்போது நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த வெற்றியை உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன. மேலும் இந்திய பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார். இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது. ஆனால், நாம் நம் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். நமக்கு அதிக முதலீடுகள் தேவைப்படுகிறது. விண்வெளித்துறை வளர்ச்சியடைய வேண்டும், அதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடையும். அது தான் எங்கள் இலக்கு. பிரதமர் மோடி எங்களுக்கு வழங்கிய இலக்கை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றார்.