இந்தியன் 2 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா ? காத்திருக்கும் ரசிகர்கள்

இந்தியன் 2 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா ? காத்திருக்கும் ரசிகர்கள்!

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று வெளியாகி உள்ள தகவலால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற வெற்றிகரமான படத்தை கொடுத்து,கமலின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தி உள்ளார். விக்ரம் படத்தில் வெற்றியை தொடர்ந்து அதே சூட்டோடு இந்தியன் 2 படத்தையும் முடிந்துவிட முடிவு செய்யப்பட்டு. படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லைகாவுடன் பிரச்சனை போன்றவை சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணியாற்றி வருகின்றனர். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக உள்ளார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது தென்ஆப்ரிக்காவில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என்ற தகவலால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதாவது மே மாதத்துடன் இந்தியன் 2 படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று ஷங்கர் கூறியிருந்தார். அதை நோக்கித்தான் படப்பிடிப்பும் வேக வேகமாக நடைபெற்று வந்தது

ஆனால்,தற்போது , கமலின் பகுதி மட்டும் மே மாதத்துடன் முடிந்துவிடும் என்றும், சில பேட்ச் வொர்க் மற்றும் விவேக் நடித்த சில காட்சிகளை வேறு ஆட்களை வைத்து எடுக்க வேண்டி உள்ளதால், ஜூலை வரை படப்பிடிப்பு தாமதம் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பெங்கலுக்கு படத்தை வெளியிடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், ஷங்கர் இயக்கிய ராம்சரண் படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜ் திட்டம் போட்டுள்ளார். அதே போல பிரபாஸின் ப்ராஜெக்ட் கே திரைப்படமும் பொங்கலுக்குத்தான் வெளியாக உள்ளது. இரண்டு பெரிய நடிகர்களின் படமும் வெளியாவதால், ஆந்திராவில் தியேட்டர்கள் கிடைப்பது கடுமையாகி விடும். இந்த சூழ்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை படத்தை வெளியிட ஷங்கர் விரும்பமாட்டார் எனவே இந்தியன் 2 திரைப்படம் தீபாவளிக்குத்தான் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.