இந்திய ஹாக்கி அணிக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் – ஒடிசா அரசு அறிவிப்பு

இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறது ஒடிசா அரசு.

ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கான ஸ்பான்சராக கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது ஒடிசா அரசு. சுரங்கத்துறை சார்பில் இந்திய ஹாக்கி அணியுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி 2018ஆம் ஆண்டு முதல் 2023 வரையில் 5 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிக்க வேண்டும் என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஒடிசா அரசு அதை நீட்டிப்பு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 2033ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையில் இந்த ஒப்பந்தம் நீடிக்கும். இந்த காலகட்டத்திற்கு இந்திய ஹாக்கி அணிகளுக்காக ஒடிசா அரசு ரூ.434.12 கோடியை ஒதுக்கியுள்ளது.