இந்தியாவின் வளர்ச்சி உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் – பி20 உச்சி மாநாட்டில் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன்!

உலகின் எதிர்காலத்தை இந்தியாவின் வளர்ச்சி தீர்மானிக்கும் என பி20 உச்சி மாநாட்டில் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பேசினார்.

பிசினஸ் 20 அல்லது ‘பி20 மாநாடு இந்தியா 2023’ மாநாடு இன்று புதுடெல்லியில் தொடங்கியது. இம்மாநாடு R.A.I.S.E என்னும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பொறுப்பு, துரிதம், புதுமை, நீடித்தத் தன்மை, வணிக சமநிலை ஆகியவையே இதன் பொருள்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், ஜெய்சங்கர், பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபார நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டு, உலகளாவிய வணிகங்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்கின்றனர்.

ஆக.27ம் தேதி நடைபெறும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இன்றைய தொடக்க விழாவில் பேசிய டாடா சன்ஸ் தலைவரும், பி20 மாநாட்டின் தலைவருமான என்.சந்திரசேகரன் கூறுகையில்,”உலகின், குறிப்பாக தெற்கு உலகின் சமமான பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்று தெரிவித்தார்.

மாநாட்டின் முதல் நாளான இன்று பி20 முன்னுரிமைகள், உலகுக்கான இந்தியாவின் பரிந்துரைகள் உள்ளிட்ட 7 அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாஸ்டர்கார்டு தலைமை செயல் அதிகாரி மைக்கேல் மீய்பேக் மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போகர் ப்ரென்டே உள்ளிட்ட பல்வேறு இந்திய வணிகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.