திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சி!

திருப்பூரில் 50 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்கவுள்ள சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக, இந்திய நிட்பேர் அசோசியேஷன் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவரான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய சர்வதேச பின்னலாடை 50-வது பொன்விழா கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள், திருப்பூர் பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகளாவிய வர்த்தகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வணிகத் தளத்தை ஏற்படுத்தித் தர முடியும். குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து முன்னணி நிறுவனங்களை சேர்ந்த வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 50-வது பின்னலாடை கண்காட்சியின் முன்னோட்டமும் டெல்லியில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்திய நிட்பேர் அசோசியேஷனுடன் பல்வேறு அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகள், பின்னலாடை துறை வளர்ச்சிக்கான புதிய கண்டுபிடிப்புகள், புதிய துணி வகைகள் போன்ற எண்ணற்ற தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திருப்பூருக்கு கிடைக்கும்.

200-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், வர்த்தக முகவர்கள் மற்றும் வர்த்தக தொடர்பு ஆலோசகர்கள் இக்கண்காட்சியை பார்வையிட உள்ளனர். தொழில் துறையினருக்கு உதவும் வகையில் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கண்காட்சியின் சிறப்பம்சமாக செயற்கை நூல் இழையிலான விளையாட்டு உடைகள் இடம்பெற உள்ளன.

பொன் விழா ஆண்டையொட்டி, ‘ஃபேஷன் ஷோ’வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொழில் துறையினர் இதற்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூரில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் அரங்குகள் அமைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.